கிரிவலம்

 கிரிவலச் சிறப்பு : 


திருஅண்ணாமலையில் சாட்சாத் சிவபெருமானே பூரண யோக சித்தலிங்க மலை வடிவில் காட்சியளிப்பதால் மலையைச் சுற்றி வலம் வருவதுதான் மிகச் சிறந்த வழிபாடு ஆகிறது. இன்றைக்கும் பலகோடி சித்தர்களும், மஹான்களும், யோகியர்களும் தினந்தோறும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த வண்ணம் இருக்கின்றனர்.


இப்பூவுலகில் பல மலைவலங்கள் இருந்தாலும் இரண்டு மலைவலங்கள்தான் மிகவும் தெய்வீக ஈர்ப்பு வாய்ந்தவையாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.


ஒன்று இமயமலையில் கைலாய கிரிவலம்; மற்றொன்று திருஅண்ணாமலை கிரிவலம். திபெத் நாட்டில் தெய்வீகப் பெருவாழ்வு வாழ்கின்ற ‘லாமாக்கள்' (Lamas) எனப்படும் அற்புதமான யோகியர்கூட இன்றும் பூத உடலால் (Physical Body) திருக்கயிலாய மலையையும், சூட்சும சரீரத்தால் (Spiritual Body) திருஅண்ணாமலையையும் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.


துமட்டுமா? அந்தந்த கிழமைக்குரிய கிரஹாதிபதிகளும், நட்சத்திர தேவதைகளும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதுண்டு. புழுக்கள், விலங்கினங்கள், தாவரங்கள், வண்டினங்கள் என ஒவ்வொரு ஜீவராசிக்கும் உரித்தான தேவதைகளும் தங்கள் இனத்தின் நலம் திருஅண்ணாமலையை வலம் வருகின்றன. வேண்டித்


ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு போன்ற சித்த தெய்வ அவதார மூர்த்திகள்கூட ஏதேனும் ஒரு ரூபத்தில் தினந்தோறும் கிரிவலம் வருகின்றனர். ஸ்ரீஅங்கவ மகரிஷி தமது 10000 சீடர்களுடன் கணக்காற்று பிரதட்சண மார்க்கமாய்ப் பல கோடி யுகங்களாக கிரிவலம் வந்தவாறு இருக்கின்றார்.


திருஅண்ணாமலை திருத்தலத்தின் அற்புதமான ஆன்மீகச் சிறப்பு என்னவெனில் பகலோ, இரவோ, சந்திநேரத்திலோ, வெயிலோ, மழையோ எந்த நேரமும் யாராவது ஒருவர் கிரிவலம் வந்தவாறு இருப்பர்! கந்தர்வர்கள், தேவர்கள், மகரிஷிகள் மற்றும் சிவலோகம். விஷ்ணுலோகம் போன்ற பிறலோக வாசிகளும் திருஅண்ணாமலை வந்து பூவுலக நியதிகளுக் கேற்றவாறு மானுட வடிவம் எடுத்தோ, அல்லது ஈ, எறும்பு, கிளி, வண்ணநிறப் பறவை, பாம்பு, பசு, நாய் போன்ற வடிவம் தாங்கியோ சர்வேஸ்வரனை வலம் வந்து வணங்கியவாறே இருப்பதால் கிரிவலம் வருவோர் 'நாம் தனியாகச் செல்கின்றோமே!" என்ற கவலையோ, பயமோ கொள்ளத் தேவையில்லை!


கிரிவல தரிசனங்களும் அவற்றின் சிறப்பும். 


'கலியுகத்தில் தர்மம் குறைந்து அதர்மமே செழித்தோங்கும். அதனால் உலக ஜீவன்கள் பல்வேறு துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவிப்பர்' என்பதைத் தமது தீர்க்க தரிசனத்தால் அறிந்த யோகியரும், மகரிஷிகளும் பல்வேறு யுகங்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து, கலியுக ஜீவன்களின் துயர்களைத் துடைக்கத் தேவையான தீர்வுகளைத் தரும் பல்வேறு இடங்களில் அமர்ந்து மலையை நோக்கிய வண்ணம் தவம் இருந்தனர். அவ்வாறு அவர்கள் அற்புத தவமியற்றிய இடங்களே தெய்வீக ரீதியாக மகத்துவம் பெற்றன. பல்வேறு தரிசனங்களாய் சிறப்புப் பெயர் பெற்று, கிரிவலம் வந்து அவ்விடத்தில் இருந்து திருஅண்ணாமலையை தரிசிப் போருக்குக் குறித்த துன்பங்களுக்கு நிவாரணமும் அளிக்கின்றன.


மகரிஷிகள் மட்டுமன்றி தெய்வத்திருமூர்த்திகளும் கிரிவலம் வந்து சர்வேஸ்வரனாம் திருஅண்ணா மலையாரை தரிசித்த இடங்களும் பல்வேறு இறை தரிசனங்களாய் மலர்ந்து அபரிமிதமான பலன்களை நல்குகின்றன.


தரிசனம் என்றால் கிரிவலம் வரும்போது கிரிவலப் பாதையில் குறித்த ஓர் இடத்தில் இருந்து மலைஉச்சியை தரிசித்தலாகும். திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான ஏன், கோடிக்கணக்கான தரிசனங்கள் உள்ளன. எப்படி என்று கேட்கிறீர்களா?


கிரிவலம் வரும்போது ஒவ்வொரு அடி எடுத்து வைத்த பின்னரும் மலை உச்சியை தரிசனம் செய்தல் உத்தமமானது. இதற்காகவே, நிறைமாத கர்ப்பிணிப் பெண் நடந்து செல்வதைபோல் கிரிவலம் வருதல் வேண்டும் என்று பெரியவர்கள் அருளியுள்ளனர். அவ்வாறு ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு தரிசனம் உண்டு. அந்த தரிசனமும் பகல், இரவு, நாள், கிழமை, நட்சத்திரம், ஹோரை,திதி போன்ற வெவ்வேறு நியதிகளுக்கேற்ப ஒரே தரிசனமே பல்வேறு பலாபலன்களை மாறிக் கொண்டே தரவல்லது.


ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து நாம் பெறும் தரிசனம்கூட அப்படியே இருப்பது இல்லை. நாம் நகராமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தால் கூட கோள்களும், நட்சத்திரங்களும் சந்திர, சூரியர்களும் நகர்ந்து இடம் மாறிக் கொண்டே இருப்பதால், ஒரே இடத்தில் நின்று பெறும் தரிசனப் பலன்களும் மாறிமாறி அமைகின்றன. ஒரே அம்பிகையானவள் நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் பல்வேறு நாம ரூபங்களைத் தாங்கி அருள்புரிவதைப்போல ஒரு தரிசனமே கிழமை, நட்சத்திரம், நாள், யோகம், கரணம், ஹோரை போன்ற கால விகிதங்களுக்கேற்ப பல பெயர்களைக் கொண்டு என்று விளங்குகின்றது. எனவே 'ஒரே இடத்தில் பெறுகின்ற தரிசனத்துக்கு வெவ்வேறு பெயர்களா?' குழப்பமடைதல் வேண்டாம்.


இப்போது புரிகின்றதா திருஅண்ணாமலையாரின் அற்புதம்! இதுமட்டுமா? தன்னை தரிசிப்போரின் மனப்பக்குவம், தெய்வீக உயர்நிலைக்கேற்பத் தன் வடிவத்தை மாற்றிக் காட்சி தரும் சிறப்பும் உண்டு. நவவியாகரண பண்டிதராம் ஸ்ரீஆஞ்சநேயப் பெருமான் கிரிவலம் வரும் திருஅண்ணாமலையின் வடிவமும், சுற்றளவும் வேறு! நாம் கிரிவலம் வரும்போது அதே திருஅண்ணாமலையின் வடிவமும், சுற்றளவும் வேறு! நமது முன்னோர்களான வசு, ருத்ர, ஆதித்யப் பித்ருக்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தால் அவர்கள் மானுட உடல் தாங்கி இப்பூவுலகில் வாழ்ந்த போது எவ்வாறு காட்சியளித்ததோ, அவ்வாறே திருஅண்ணாமலை தோற்றமளிக்கிறது.


இவ்வாறு திருஅண்ணாமலையின் பெருமை யையும், மஹிமைகளையும் விவரித்துக்கொண்டே செல்லலாம். எல்லையில்லாப் பெருங்கடலாய் அது விரியும்! எனவேதான் பலகோடி யுகங்களாக ஸ்ரீநந்தீஸ்வர பெருமான் திருஅண்ணாமலை கிரிவல மஹிமையை இடைவிடாது எடுத்துரைத்து வர, ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியும் கிரந்த நாடிகளாக இன்னும் வடித்துக் கொண்டே இருக்கின்றார் என்றால் திருஅண்ணாமலையாரின் மகிமை என்னே!


ஓம் குருவே சரணம் 

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை