திருமுறை
சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள் நூல்கள் பன்னிரண்டு எனப் பெரியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. அவையே திருமுறை.
ராஜராஜசோழன் தமிழுக்குச் செய்த பெரும் தொண்டு, தேவாரத் திருப்பதிகங்களை தேடி, அவை தில்லை நடராஜப் பெருமான் ஆலய அறை ஒன்றில் அடைந்து கிடந்து, கரையானுக்கு இரையாகி வரும் செய்தி அறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்தது!
ஆலய தீட்சிதர்கள், தேவாரத்தைப் பாடித் தந்த அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் நேரில் வந்தால்தான் சுவடிகளைத் தருவோம்' என்று வல்லடி வழக்கு' பேசினர்.
மன்னன் நினைத்திருந்தால் அவர்களை சிறையில் பூட்டி, பாடல்களைப் பறிமுதல் பண்ணியிருக்கலாம்.
தூய சிவபக்தன் ராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயில் கண்டவன். அதனால் அராஜகத்தில் இறங்காமல், மூவர் திருமேனியையும் கோயிலுக்கு எடுத்த வந்து நிறுத்தி, இதோ, தேவாரம் பாடியோர் வந்துவிட்டார்கள். சுவடியைக் கொடுங்கள்' என்று கேட்டுப் பெற்றான். அதனால் நமக்குக் கிடைத்தது அமிழ்தினும் இனிய ஆன்மிகப் பனுவல் - தேவாரம்.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் அருளிய தேவாரங்களும், மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும், திருச்சிற்றம்பலக் கோவையார், திருமாளிகைத் தேவர் உள்ளிட்ட ஒன்பது நாயன்மார்கள் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவையும், திருமூலரின் திருமந்திரமும், திவாலவாயுடையார் முதல் நம்பியாண்டார் நம்பி வரை பன்னிருவர் அருளிய நூல்களின் கோவையாகிய பதினோராம் திருமுறையும், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமும் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
சம்பந்தர் பாடிய தேவாரங்களை மூன்றாகப் பிரித்து, முதலாவது, இரண்டாவது, மூன்றாவது திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் (அப்பர்) பாடிய தேவாரங்களை மூன்றாக வகுத்து நான்காவது, ஐந்தாவது, ஆறாவது திருமுறைகளாகவும் சுந்தரர் அருளிய தேவாரங்களை ஏழாவது திருமுறைகளாகவும் வகுத்தனர்.
மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் இரண்டும் சேர்ந்து எட்டாம் திருமுறை.
திருமாளிகைத் தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் அருளியவை ஒன்பதாம் திருமுறை.
திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறை.
திவாலவாயுடையார் முதல் நம்பியாண்டார் நம்பி வரை பன்னிரண்டு பேர் அருளிய நூல்கள் பதினோராம் திருமுறை எனவும்; சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தை பன்னிரண்டாவது திருமுறை எனவும் வகுத்தனர்.
இவற்றுள் பதினோரு திருமுறைகளைத் தொகுத்து வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. பின்னர் அநபாய சோழன் என்ற மன்னன் சேக்கிறாரைக் கொண்டு பெரிய புராணத்தை அரங்கேறச் செய்து அதைப் பன்னிரண்டாவது திருமுறை ஆக்கினான்.
திருமுறைகளின் ஆசிரியர்கள் மேலே கூறிய 27 பேர்.
இதில் திருவிசைப்பா' பாடிய நாயன்மார்கள், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர் தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமநம்பி, சேதிராயர் என்னும் ஒன்பது பேர்.
பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்ட நூல்களின் ஆசிரியர்கள்: திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள், காடவர் றேகான், கழறிற்றறிவார், நக்கீரதேவர், கல்லாடர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிருவர்.
இதுவரை கிடைத்துள்ள திருமுறைகளின் பாடல் தொகை 18,267 (பதினெண்ணாயிரத்து இருநூற்று அறுபத்தேழு)
திருமுறைகள் அனைத்தும் சிவபெருமானின் திருவாக்குகளே. அவரே அடியவர்களுக்கு உள்ளிருந்து உணர்த்தியும், முதலடி எடுத்துக் கொடுத்தும் வெளிப்படுத்திய அருள்வாக்குகள்.
அவை சிவபிரானின் அருளை அன்பர்களுக்கு அன்றும் தேடித்தந்தன; இன்றும் தரவல்லன. அதனாலேயே இவை அருட்பாக்கள் எனப்படும். இவற்றுள் சிவசக்தியாகிய உயிர் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், என்றும் அழியாத அமரத்துவம் பொருந்தி நிற்கிறது.
திருச்சிற்றம்பலம் ...
Comments
Post a Comment