பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள்
சுவாமிகள் வரலாறு -
பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன் பெறுவோமாக.
*பிறப்பு*
பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
*தமிழ் ஞானம்*
அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார்.
கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் 36 முறை ஓதினார்.
கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார்.
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
முதன் முதலாக முருகனை போற்றி "கங்கையை சடையிற் பரித்து" என தொடங்கும் பாடலை இயற்றினார்.
தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார்.
அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.
*திருமணம்*
சுவாமிகள் திருமண பருவம் அடைந்தும் திருமணஞ் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்தார். சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன.
முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுது கொண்டே இருந்தது. அம்மையார் சுவாமிகளிடம் குழந்தை அழுவதை கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார்.
சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார். அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார்.
அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது என கூறி தாயிடம் தந்து விட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.
*பொய் பகரல்*
சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார்.
சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்துப்பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார்.
அங்கமுத்துப்பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், இது முருகப்பெருமான் ஆணை என பொய் பகன்றார்.
அன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது.
அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. "எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா?" எனக்கூறி அச்சுறுத்தியது.
சுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, "தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு" வேண்டினார். அதற்கு, இறைவன், "இனி பழனிக்கு வரக்கூடாது" என உறுதி அளிக்குமாறு கூறினார்.
சுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.
*சண்முக கவசம்*
அடிகளாரின் தந்தையார் இறந்ததால், சுவாமிகளுக்கு குடும்ப சுமை அதிகரித்தது. சுவாமிகள் குத்தகை தொழில் புரிந்து வந்தார்.
1891ம் ஆண்டு தமக்கு வந்த இன்னல் நீங்கும் பொருட்டு அ முதல் ன முடிய (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18) 30 பாடல்களால் சண்முக கவசம் இயற்றினார்.
இதனால் அவரது இன்னல் நீங்கியது. சண்முக கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பாராயணம் செய்து பலனடைந்தார் பலர்.
சிறிது நாள் கழித்து, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் எனும் செய்யுளை பாடியருளினார். இந்த பாடல் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது.
*வழக்குகளில் வெற்றி*
அடிகளார் தொழில் நிமித்தமான பல்வேறு வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. முருகன் அருளால் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.
*தொடரும் . . .*
Comments
Post a Comment