தேரையர் சித்தர்

 தேரையர்



வரலாறு சுருக்கம்

தலையைப் பிளந்து அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தேரையருக்கு என்ன பெயர் இருந்ததோ? ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார். அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார். குருவின் இந்த அற்புதமான விளக்கத்தைக் கேட்ட தேரையர், அவரிடம் மிகுந்த நேசம் கொண்டார். அந்நேரத்தில் அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார். இந்த சமயத்தில், காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது. அவன், அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்தான்.பெருமானே! என்னை தாங்க முடியாத தலைவலி ஆட்டிப்படைக்கிறது. ராஜாங்க விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தாங்கள் நினைத்தால், இதை நொடியில் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காப்பாற்ற வேண்டும், என வேண்டி அவரது பாதத்தில் விழுந்தான்.அரசன் மீது அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். அவனை பரிசோதித்தார். தலைவலிக்கான காரணம் தெரிந்து விட்டது. அவனிடம் சொல்ல யோசித்தார். மன்னா! நீ அரண்மனைக்குச் செல். நாளை இந்த வியாதியை தீர்த்து விட ஏற்பாடு செய்கிறேன், என்றார்.சுவாமி! இந்த வலிக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சொல்லி அருளுங்களேன் என்றான் மன்னன்.அது உனக்கெதற்கு? வியாதியஸ்தனுக்கு மருந்தும் சுகமும் தானே தேவை. நீ புறப்படு, என்றவரிடம், மன்னன் மிகவும் பணிவுடன் கேட்டான். மன்னா! சொல்ல வேண்டாம் என நினைத்தேன். சொல்ல வைத்து விட்டாய். உன் தலைக்குள் தேரை ஒன்று இருக்கிறது, என்றார். தேரை என்பது தவளை வகையில் ஒன்று. தேரையா! அதெப்படி தலைக்குள் நுழைய முடியும், என்று மன்னன் கேட்கவே, நீ தூங்கும்போது, உன் மூக்கின் வழியாக குஞ்சு ஒன்று நுழைந்திருக்க வேண்டும். அது தலையை இப்போது அடைந்ததால், வலி வந்திருக்கிறது, என்றதும், மன்னன் அதிர்ந்தான். சுவாமி! என்னால் நம்பவே முடிய வில்லையே. இப்படி ஒரு கொடிய நிலைமையா எனக்கு? தலைக்குள் இருக்கும் தேரையை எப்படி வெளிக்கொண்டு வர முடியும்? என்று பதட்டப்பட்டு கேட்ட மன்னனிடம், பயப்படாதே. நாளை உனக்கு கபால சிகிச்சை செய்யப் போகிறேன். உன் தலையைப் பிளந்து, உள்ளிருக்கும் தேரையை எடுக்க முயற்சிக்கிறேன், என்ற தேரையரை இடைமறித்த அரசன், ஐயோ சுவாமி! தலையை உடைத்த பின் எப்படி என் உடலில் உயிர் தங்கும்? என உடல் வெடவெடக்க கேட்டான். அகத்தியர் அவனைத் தைரியப் படுத்தினார். மன்னா! தலையைப் பிளக்கவும், அதை மூடவும் என்னிடம் மூலிகைகள் உள்ளன. இதனால் உனக்கு வலி தெரியாது. மேலும், சில மூலிகைகளைக் கொடுத்து உன்னை மயக்கமடையச் செய்து விடுவேன். என்ன நடக்கிறது என்பதை நீ அறியமாட்டாய். என்னிடம் வைத்தியம் பார்க்க வந்த எவரும் இதுவரை குணமாகாமல் திரும்பியதில்லை, என்றார். அகத்தியரின் தெய்வசக்தியை மன்னனும் அறிவான். எனவே, அவன் சிகிச்சைக்கு சம்மதித்தான். அகத்தியர் மன்னனின் மூக்கருகே ஏதோ ஒரு மூலிகையை நீட்டினார். அதன் வாசனைபட்டதுமே, மன்னன் படிப்படியாக மயக்கநிலையில் ஆழ்ந்தான். ஏதோ ஒரு மூலிகையை எடுத்து அரைத்து மன்னனின் தலையில் தடவிய அகத்தியர், அவனது தலையின் ஒரு பகுதியை பவ்யமாக உடைத்து திறந்தார். என்ன அதிசயம்! மன்னனின் மூளையில் ஒரு தேரை (தவளை) உட்கார்ந்திருந்தது. அது மிரள மிரள விழித்தது. இதை எப்படி வெளியேற்றுவது...கை படக்கூடாது. ஏதாவது குச்சியால் தட்டினால் அது ஏதாவது ஒரு இடத்தில் போய் பதுங்கிக் கொண்டால், பின்னர் மன்னனின் உயிருக்கு ஆபத்தாகி விடும்! வைத்திய மாமேதையான அகத்தியரே கலங்கி விட்டார். இந்த சமயத்தில், அருகில் நின்ற தேரையர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். மன்னன் தலையருகே வைத்து, கைகளை தண்ணீருக்குள் விட்டு அளைந்தார். தண்ணீரின் சல சல சத்தம் கேட்ட தேரை தலையில் இருந்து குதித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டது. உடனே பாத்திரத்தை அங்கிருந்து அகற்றி விட்டார் தேரையர். தன் சிஷ்யனின் அபார அறிவு திறனை அகத்தியர் பாராட்டினார். தேரையா! தன்னைச் சார்ந்தவனுக்கு இக்கட்டான நிலையில் கை கொடுப்பவனே உலகில் உயர்ந்தவன். நீ செய்த காரியத்தால், என் மானமும், மன்னனின் உயிரும்காப்பாற்றப்பட்டன. என் மருந்துப்பெட்டி யிலுள்ள சந்தானகரணி மூலிகையை எடு, என்றார். சந்தானகரணியை எடுத்த தேரையர், குருவே! இதன் குணம் என்ன? என்றார். உடைந்த தலையை ஒட்டவைக்கும் அரியவகை மூலிகை இது, என்ற அகத்தியர் அதன் சாறைப் பிழிந்து தலையில் ஊற்றினார். சிறிது நேரத்திலேயே தலை ஒட்டிக்கொண்டது. அகத்தியரே இந்த சிகிச்சையை செய்தார் என்றாலும் கூட, தேரை வெளியேற தேரையரே காரணமானார். தேரையுடன் சம்பந்தப்பட்டவர் என்பதால் தான் இவருக்கு தேரையர் என்ற பெயரே ஏற்பட்டது. இன்னொரு சமயத்திலும் அகத்தியருக்கு பெரும் உதவி செய்தார் தேரையர். அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார். அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன். நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம். மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார். குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்... தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா... தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய்யுமளவுக்கு தகுதி பெற்று விட்டாய். அதனாலேயே உன்னை வெளியே அனுப்புகிறேன். கடந்த வாரத்தில், உன் கைங்கர்யத்தால் காட்டில் இருக்கும் முனிவர் ஒருவரின் வயிற்று வலி நீங்கியது! என்றார். ஆம்...மன்னனுக்கு கூன் நிமிர்ந்த பிறகு, தீராத வயிற்றுவலி இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு முனிவர் அகத்தியரிடம் மருந்து வாங்க வந்தார். அதி அற்புதமான திரவ மருந்தொன்றை அவருக்கு கொடுத்த அகத்தியர், பத்திய முறைகளின் படி இதைச் குடித்து வர, வலி பறந்தோடி விடும் என சொல்லி விட்டார். அகத்தியரின் மருந்துக்கு மறுமருந்து உண்டா? முனிவரும், அதை குடித்தார். உஹும்...வலி தீரவில்லை.இரண்டு நாள் கழித்து முனிவர், தன் சீடன் ஒருவனை அகத்தியரிடம் அனுப்பினார். அவன் அகத்தியரிடம் வந்து, அகத்திய சித்தரே! தங்கள் மருந்தாலேயே எங்கள் குருவின் வியாதியைக் குணப்படுத்த முடியவில்லை என்றால், இனி யாரால் மருந்து தர இயலும்? குரு வயிற்றுவலி தாளாமல், இன்னும் பிதற்றிக் கொண்டிருக்கிறார், என்றான். அகத்தியருக்கு ஆச்சரியம். சரியான மருந்தைத் தானே கொடுத்தேன். சரி.. சரி... உன்னோடு, தேரையனை அழைத்துச் செல். அவன் என்ன ஏதென்று பார்ப்பான், எனச்சொல்லி தேரையரை அனுப்பி வைத்தார். தேரையர் அங்கு சென்று முனிவரைச் சோதித்தார். கொருக்கை என சொல்லப்படும் குச்சியை எடுத்தார். அந்தக் குச்சியின் நடுவில் துவாரம் இருக்கும். அதாவது, இப்போது நாம் குளிர்பானம் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்டிரா போல! அதன் மூலமாக, அகத்தியர் கொடுத்த அதே மருந்தை உறிஞ்சி குடிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்! வலி உடனே பறந்து விட்டது. தேரையர் மகிழ்ச்சியுடன் ஆஸ்ரமத்துக்கு வந்து, அகத்தியரிடம் நடந்ததைச் சொன்னார். அகத்தியர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் பெயரைக் காப்பாற்றினாய், என்று சொல்லி பாராட்டினார். இப்படி அகத்தியர் பல மருந்துகளைக் கண்டுபிடிக்க, அதைப் பயன்படுத்தும் வித்தையை தேரையர் பல்வேறு விதங்களில் கையாள...பல நோயாளிகள் பயன் பெற்றனர். இந்தக் காரணத்தாலேயே அகத்தியர், தேரையரை வெளியில் அனுப்ப உத்தேசித்தார். இந்தக் காலத்தில் தொழில் தெரிந்த ஒருவர், தன்னைப் போலவே ஒருவர் அதே தொழிலைச் செய்ய முற்படுகிறார் என்றால், அவரை எப்படி கவிழ்க்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்து விடுவார். ஆனால், மகான்கள் பிறர் நன்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.குருவின் கட்டளையை ஏற்று தேரையரும் கிளம்பி விட்டார். அகத்தியர் இருந்த இடத்தை விட்டு வெகு தொலைவிலுள்ள காட்டுக்குச் சென்றார். அங்கு பல முனிவர்களுக்கு வைத்தியம் செய்து அவர்களின் பிணி நீக்கினார். இந்நிலையில், பாண்டியநாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தங்களுக்கு தங்கம் கிடைத்தால், அதை வேற்று நாட்டவரிடம் விற்று, உணவுப் பொருள் வாங்கிக் கொள்வதாக மக்கள் தேரையரைச் சந்தித்துக் கூறினார்.தேரையரும் தங்கம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் அமைத்த பட்டறைகளில் இருந்து எழுந்த புகை, அப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களுக்கு இடைஞ்சலைக் கொடுத்தது. அவர்களில் சிலர், அகத்தியரிடம் வந்து, உங்கள் சீடன் செய்த காரியத்தால், எங்கள் தியானம் கலைந்தது என புகார் செய்தனர். அகத்தியருக்கு கடும் கோபம். தேரையரை வரவழைத்தார். அவரிடம் பேசக்கூட இல்லை. இரண்டாக அவரைக் கிழித்தார். தேரையரின் உயிர் பறந்து விட்டது. தேரையர் தன் சீடர்களுக்கு முன்கூட்டியே, இப்படி ஒரு நிலை வந்தால், உடலை ஒட்ட வைத்து மீண்டும் உயிரூட்டும் கலையைச் சொல்லிக் கொடுத்திருந்தார். அதைப் பயன்படுத்தி தேரையரை உயிர் பெறச் செய்து விட்டனர் சீடர்கள். அதன்பின் அகத்தியருக்கு பயந்து தலைமறைவாக இருந்தார் தேரையர். சீடனின் திறமையையும், சமயோசிதத்தையும் கேள்விப் பட்டு மகிழ்ந்தார். ஆண்டுகள் ஓடின. அகத்தியருக்கு பார்வைக் குறைவு ஏற்பட்டது. அவர் சீடர்களை அழைத்து, தேரையனை மருந்துடன் வரச்சொல்லுங்கள். அவன் வந்தால் தான் எனக்கு கண் குணமாகும், என்றார். சீடர்களும் பல மைல் தூரம் சென்று, தேரையரை அழைத்து வந்தனர். தேரையர் தன் குருநாதரின் கண்களில், ஒரு மூலிகையைப் பிழிந்து விட, கண் முன்பை விட தெளிவாகத் தெரிந்தது. தன் சீடனை அப்படியே அணைத்துக் கொண்டார் அகத்தியர். தேரையா! நீ முன்னிலும் தேறி விட்டாய். உன்னை நான் கொன்றும் கூட, புத்திசாலித் தனத்தால் உயிர் பெற்றாய். என்னை பழி வாங்க எண்ணாமல், தக்க வைத்தியம் செய்தாய். உயிர் போகும் அளவிலான துன்பம் செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்பவனே உலகில் உயர்ந்தவன். அத்தகைய நற்குணத்தை நீ பெற்றுள்ளாய். நீ கண்டுபிடித்த மருத்துவக்குறிப்புகள் வீண் போகக்கூடாது. அவற்றை ஒரு நூலாக எழுதி வை. எதிர்கால வைத்தியர்கள் உன்னை தலைதலைமுறையாக வாழ்த்துவர், என்றார்.தேரையரும், 21 நூல்களை எழுதினார். பலகாலம் வாழ்ந்த அவர், முன்பு கேரளத்தில் இருந்ததும், தற்போது தமிழகத்தில் தென்காசி அருகில் உள்ளதுமான தோரணமலையில் சமாதியானதாக ஒரு குறிப்பு கூறுகிறது. தியானச் செய்யுள்: மாய மயக்கம் நீக்கி

காய கல்பம் தேடி

மூலிகை கொணர்ந்து

முதுகுக்கூன் நிமிர்த்திய

அகத்தியர் சீடரே உன்பாதம் சரணம் காலம்: தெரியவில்லை


திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை