அகப்பேய் சித்தர்

 அகப்பேய்சித்தர்



வரலாறு சுருக்கம்

மனத்தைப் பேய் என உருவகித்துப் பாடியதால்அகப்பேய்ச் சித்தர்எனப் பெயர் பெற்றிருக்கலாம். அகம்+பேய்+சித்தர் = மனமாகிய பேயை வென்று சித்தியடைந்தவரென இவருக்குக் காரணப் பெயராக அமைந்துள்ளது. அகப்பேய்ச் சித்தர் நாயனார் சாதியைச் சேர்ந்தவர். துணி வணிகஞ் செய்து பிழைத்து வந்தார் என்று போக முனிவர் கூறுகின்றார்.     வேட்டி, புடவை முதலான துணிமணிகளை வீடு வீடாகச் சென்று விற்கும்போது எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்திருப்பார். அவர்களின் ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள் அவர் மனத்தைத் தொட்டன. மனிதன் துன்பம் இல்லாமல் வாழ முடியாதா? இரவு பகலாகச் சிந்தித்தார். அவ்வாறு பாதிக்கப் படுகிறவர்கள் ஏதாவது விமோசனம் காண வேண்டும் என்று நினைத்தார். தம் மனத்தை அடக்கிட நினைத்தார். அப்போது ஏ! என் அகமே! ஆசையால் ஆடுகிறாய்; ஆணவத்தால் ஆடுகிறாய் ; பாசத்தால் ஆடுகிறாய் ; வேஷத்தால் ஆடுகிறாய் இப்படிப் பேயாட்டம் ஆடுகிறாயே ! அடங்கிக் கிடக்க மாட்டாயா? என்று குமுறுகிறார்.  

நஞ்சுண்ண வேண்டாமே - அகப்பேய்     

நாயகன் தாள் பெறவே      

நெஞ்சம் அலையாதே - அகப்பேய்     

நீ ஒன்றும் சொல்லாதே.     

என்று பாடி, மனம் பேய் போன்று அலைவதைத் தடுத்து நிலைநிறுத்தி விடு என்று அறிவுரை கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர். இவரது நூல்களுள் வாத வைத்தியம், யோக ஞானப் பாடல்கள் பரிபாஷைகளைப் பெற்று, கடினமானதாக அமைகின்றன. (பரிபாஷை :ஒவ்வொரு துறையிலும் அதற்கே உரிய கலைச்சொற்கள் உண்டு. அவற்றைப் பரிபாஷை என்று குறிப்பிடுவார்கள்.) மேலும் அகப்பேய்ச் சித்தர் பாடல் 90, பூரண ஞானம் 15 என்ற நூல்கள் யோக ஞான சாஸ்திரத் திட்டு ஏழாம் பாகத்தில் (தாமரை வெளியீடு) உள்ளன. அகப்பேய்ச் சித்தர் திருவையாற்றில் சித்தியடைந்தார் என்பர்.  திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். 

                                                           இந்த மகான் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளாசையை தேடி அலைந்தது. மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக்கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு வியாசர் மறைந்தார். மனிதர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும், தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் “அகப்பேய் சித்தர் பாடல்கள் 90” என்ற நூலை இயற்றினார். “அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான்”, என்பது இவரின் வாக்கு. 

இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை: 

அகப்பேய் சித்தர் பாடல் – 90 

அகப்பேய் பூரண ஞானம். 

இவர் சித்தியடைந்த திருத்தலம் : - திருவையாறு. 

தியானச்செய்யுள் 

இலை உடையுடன் கலை உருவாய் 

காட்சி தரும் காரியசித்தி சுவாமியே 

மாறாத சித்தியை மரப்பொந்தினில் 

பெற்ற மங்காச் செல்வரே 

அசைகின்ற புத்தியை 

இசைக்கின்ற சித்தியால் 

இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே. 

தன்னை அறியவேண்டும் - அகப்பேய்! 

சாராமல் சாரவேண்டும் பிள்ளை 

அறிவதெல்லாம் அகப்பேய்! 

பேய் அறிவு ஆகும் அடி 

ஒப்பனை அல்லவடி - அகப்பேய்! 

உன் ஆனை சொன்னேனே! 

அப்புடன் உப்பெனவே - அகப்பேய்! 

ஆராய்ந்திருப்பாயே! 

கருத்து: தன்னை அறியவேண்டும் - தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும். நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறைவன் இருக்கிறார். தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர். 


திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை