மூன்று குணங்கள்
மூன்று குணங்கள்..!
மனதிடம் மூன்று குணங்கள் உள்ளன.
அவைகள், தாமச குணம், ராஜஸ குணம் மற்றும் சத்துவ குணம் என்பதாகும்.
அன்பு, கருணை, பணிவு, ஒழுக்கம், சந்தோஷம் எதற்கும் பதற்றப்படாமல், சாந்தமான மன நிலையில் அனைவரின் மீதும் பிரியமாக எப்பொழுதும் இருந்து கொண்டே, நல்ல சிந்தனா சக்தியுடனும், கிரியா சக்தியுடனும் இருப்பதைத்தான் “சத்வ குணம்” என்ற சாத்விகம் கொண்ட மனம் எனப்படும்.
எப்பொழுதும் ஒரே பதற்றம், ஆசை, கோபம், விருப்பு, வெறுப்பு மற்றும் உணர்ச்சி வசப்படுவது, இவை எல்லாம் ரஜஸ் - “ரஜோ குணம்” அல்லது ராஜஸ குணம் பெற்ற மனம் எனப்படும்.
ஒரே கருமித்தனம், சோம்பேறித்தனம் மந்தத் தன்மையுடன் இருப்பது, எதிலும் ஆர்வமில்லாமல் காணப்படுவது, அடிக்கடி தூங்கி வழிவது போன்றவைகள் “தாமஸ குணம்” கொண்ட மனம் எனப்படும்.
இந்த மனம் எப்படி இருக்கின்றதோ, அதுப்போலவே, அந்த ஜீவனின் செயல்பாடுகள் காணப்படும். அந்த செயல்களின் வெளிப்பாடாக ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முறையைப் பார்த்து அறிய முடியும்.
இவ்வாறு செயல் செய்யும் மனிதன் தன்னுடைய செயல்களை சாஸ்திரம் சார்ந்து செய்தால், அந்த செயல்களின் வெளிப்பாடு நன்றாகவும், மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் விதமாகவும் வாழ முடியும் என்று அறிந்த ஆன்றோர்கள் இந்த செயல்களை நெறிப்படுத்தினார்கள்.
அவைகளை ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வின் வழிபாடாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஐந்து வழிபடு முறைகளை அறிமுகப்படுத்துகின்றார்கள்.
அவைகளை, சனாதன தர்மம் வழி வந்தவர்களும் சரி, இனி சனாதன தர்மம் கூறும் வழியில் வாழ விரும்புபவர்களும் சரி! அவர்கள் தங்களுடைய வாழ் நாட்களில் இந்த வழிபாட்டை ஐந்து யக்ஞங்களாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.
அந்த யக்ஞங்கள் வேள்வி குண்டம் அமைத்து யாக பூசை செய்வதல்ல, ஒவ்வொருவனும் தன்னுடைய கடனாகவும், கடமையாகவும் அதை செயல்படுத்த வேண்டும் என்கின்றது.
இந்த அறச் செயல்களினால் மட்டுமே மனித தேகம் எடுத்து வருகின்ற ஒவ்வொரு ஜீவனும் இந்த பிறவியை சரியானபடி முடித்து, அந்த பராபரன் பதம் அடைய முடியும் என்கின்றது.
இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்தி, செய்ய வேண்டிய காரியங்கள் ஐந்து வகைப்படும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகின்றது.
அவைகள்,
1. தேவ யக்ஞம்
2. ரிஷி யக்ஞம்
3. பித்ரு யக்ஞம்
4. மனுஸ்ய ( நர) யக்ஞம்
5. பூத யக்ஞம்
என்ற ஐந்து யக்ஞங்களை கூறுகின்றது.
வழிபடுதல் என்ற பொருள் உடைய யஜ் என்ற தாதுவிலிருந்து தோன்றி வினைச்சொல் “யஜ்ஞம்” அல்லது “யக்ஞம்” என்று அழைக்கப்படுகின்றது.
யக்ஞம் என்றால் வழிபாடு என்று பொருள்.
அந்த வகையில், தேவ யக்ஞம் என்றால், நமக்கு விருப்பமான தேவதையை வழிபடுதல், அதாவது கடவுளை பூசை, ஹோமங்கள் செய்து வழிபடுவது ஆகும்.
ரிஷி யக்ஞம் என்பது, ரிஷிகளினால் போதிக்கப்பட்ட வேத சாஸ்திரங்களை கடைப்பிடித்து, அதன்படி வாழ்ந்து, எதிர்கால சந்ததியர்களுக்கும் அந்த சாஸ்திரத்தின் உண்மைத் தத்துவத்தை கொண்டு சேர்ப்பது.
இதனால், நம் முன்னோர்களான ரிஷிகளை வழிபடுவதற்கு ஒப்பாகும். அவர்களும் இதனால் மகிழ்ச்சியடைவார்கள்.
அடுத்து, பித்ரு யக்ஞம் என்பது, நம்முடைய பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாகச் செய்து, அவர்களை மகிழ்வித்து, அவர்கள் இறந்த பிறகும், அவர்களை நினைவு கூர்ந்து, அவர்கள் சார்பாக மற்றவர்களுக்கு தான தர்மங்கள் செய்வது ஆகும்.
இதனால், பித்ருக்களை வழிபடுவதற்கு இது ஒப்பாகும். இதனால், பித்ருக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
மனுஸ்ய அல்லது நர யக்ஞம் என்றால், நாம் பிறக்கும் பொழுது, நம்முடன் உடன் பிறந்தவர்கள் மற்றும் நம் பெற்றோர்கள் மூலமாக வருகின்ற சொந்த, பந்தங்கள் போன்ற உற்றார் உறவினர்களை மகிழ்விக்கும் பொருட்டு, அவர்களை நம் விருந்தினர்களாக உபசரித்து, விருந்து கொடுத்து, ஆடை, அணிகலன்கள் கொடுத்து அவர்களது சந்தோசத்தை கண்டு நாம் மகிழ்ச்சி அடைவதை கூறுகின்றது.
இது ஒருவகையில் ஒருவரை ஒருவர் நேசித்து நமஸ்கரித்து வழிபாடு செய்வது போன்றதாகும்.
பூத யக்ஞம் என்பது, நம்முடைய பிறவிக்கு உடல் கிடைக்க காரணமாக இருந்த நீர், நிலம், காற்று, மற்றும் நெருப்பு, ஆகாயம் போன்றவைகளை மாசு படுத்தாமல், அவைகளின் தேவை கருதியும், நம்முடைய பிற்கால சந்ததிகள் அனுபவிக்க அவைகளை சீர் கெடுக்காமல், பாதுகாத்து, இந்த பூமியில் நம்மைப் போன்றே இந்த பஞ்ச பூதங்களினால் உடல் கிடைத்த மற்ற மிருகங்கள், பறவைகள் என மற்ற ஜீவர்களையும் நேசித்து, அவைகளுக்கும் உணவு கொடுத்து மகிழ்வது, அந்த பஞ்ச பூதங்களையும் வழிபடுவதற்குச் சமம்.
இது போன்று அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற வாழ்க்கை முறைகளை நம் தர்மம் போதிக்கின்றது.
இதனால், நாம் இந்த இயற்கையின் வாயிலாக மற்ற அனைவரிடமும் இருந்து ஒவ்வொன்றையும் பெற்று, அதனை அனுபவிக்கின்றோம்.
அதற்கு கைமாறாக நன்றிக்கடனை திருப்பிச் செய்கின்றோம்.
இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் நன்றி விசுவாசத்துடன் வாழும் வாழ்க்கை முறையை சனாதன தர்மம் போதிக்கின்றது.
ஆனால், அந்த தர்மத்தை அறியாத இன்றைய மனிதன் தன் சுய நலத்தினால், நீரையும், நிலத்தையும், காற்றையும் பல இராசயண கழிவுகளாலும், பெட்ரோல், ஆயில், டீசல் போன்ற எரியூட்டும் புகைகளினாலும் இயற்கையை மாசுபடுத்தி, எதிர்கால சந்ததிகளுக்கு கேடு விளைவிக்கின்றான்.
மேலும், இவனே இனி இந்த உடலை விட்டு இறந்து, அடுத்த உடல் எடுத்து இந்த பூமிக்கு வந்தாலும் வாழ முடியாத அளவிற்கு சுற்றுப்புறச் சூழ்நிலைகளை மாசு படுத்தி வருகின்றான்.
இந்த நிலை மாற தர்மப்படி வாழ்ந்து, நல்ல செயல்களைச் செய்ய, அவசியம் நம் சாஸ்திரம் போதிக்கும் உண்மையை அறிய வேண்டும்.
நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”
ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!
Comments
Post a Comment