தச மஹாவித்யா தேவியர் - பகுதி 1

 ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 1



தச மஹாவித்யா தேவியரில் முதல் தேவியாக தரிசிக்க இருப்பது ஆரோக்கியம் அருளும் ஸ்ரீகாளீ தேவி. ஆதிபராசக்தி அனந்தகோடி பிரம்மாண்டங்ககளின் நாயகி. ஆதியும் அந்தமும் இல்லாதவள் காளி தேவி...


‘யதா யதா ஹி ஸாதூனாம் துக்கம் பவதி தானவ

ததா தேஷாம் ச ரக்ஷார்த்தம் தேஹம் ஸந்தாரயாம்யஹம்

அரூபாயஸ்ச மே ரூபம் அஜன்மாயாஸ்ச ஜன்ம ச’


அதாவது மகிஷாசுரனை நோக்கி, ‘‘ஹே, மகிஷாசுரா, ஸாதுக்களுக்கு எப்போதெல்லாம் துன்பம் நேரிடுகின்றதோ, அப்போதெல்லாம் தேகமெடுக்கின்றேன். உருவமில்லா எனக்கு உருவமும், பிறவியற்ற எனக்கு ஜன்மாவும் அமரரைக் காப்பதற்காகவே ஏற்படுகின்றது என்பதை அறிந்துகொள்’’ என்று தேவி உரைப்பதாகச் சொல்கிறது தேவி பாகவதம்.


🌺 அன்னையின் சிறப்பு :


அனைத்து காலங்களிலும் பக்தரை காக்கக் கூடிய சக்தியே காளி. பத்ரம் எனில் நன்மை. எனவே அவளை பத்ரகாளி அதாவது அனைத்து காலங்களிலும் நன்மை செய்பவள் என்று போற்றுகிறோம். அவள் இருப்பதாகச் சொல்லப்படும் மசானம் என்பது, ஏதோ இங்கு நாம் காணும் மயானமல்ல, மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கி இருக்கும் நிலையில் அவள் ஒருவளே ஆதி சக்தி என்பதை உணர்த்துவதே.


‘கலனாத் காளீ’ என்று அனைத்து பூதங்களையும் தன்னுள் அடக்கிவைத்த நிலையில் காளி என்று போற்றப்படுகிறாள் அன்னை. அவள் எல்லா யுகங்களிலும் நமக்கு நன்மை அளிப்பினும், கலிகாலத்தில் உயரிய பலன்களை அருள்பவளாகத் திகழ்கிறாள். "பயப்படவேண்டாம், நான் அபயம் அளிக்கிறேன்" என்று காளி தன் பக்தர்களைக் பயத்தினின்று காப்பாற்றுகிறாள்.


🌺 காளி வழிபட்டவர்கள்:


விக்னேச்வரர், இந்திரன், பரசுராமர், ராமர், கங்கை, லட்சுமி, சூரியன், சந்திரன், ராவணன், குபேரன், வாயு, குரு, சுக்ரர், ஹனுமான் முதலிய பலரும் காளி உபாசகர்கள் என விவரிக்கிறது ‘காளி கல்பதரு’ எனும் ஞானநூல்.


காளியை வழிபடுபவர்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பலம், சக்தி, பெரும் கீர்த்தி, கவி புனையும் சக்தி, போக மோக்ஷம், எடுத்த காரியத்தில் வெற்றி முதலான உயர்ந்த பலன்களை அடைவர்.


🌺 தக்ஷிண காளி:


ஸ்ரீகாளியின் அனுக்கிரஹத்தால் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது. ஸ்ரீகாளி உபாசகனே புண்ணிய சாலியாகவும், குலம் தழைக்கச் செய்யும் புத்திரனாகவும் ஆகின்றான். அவன் ஜீவன் முக்தனாக விளங்குகிறான். தக்ஷிண காளி என்று போற்றப்படுபவள் தேவி. தக்ஷிண என்றால் வலது என்று பொருள். பொதுவாக வலது பாகம் என்பது சிவபெருமானுடை யது. ஆதலின் சிவபெருமானின் ஆற்றல், சக்தி இவளே என்று நாம் அறிய இந்தப் பெயர் விளங்குகிறது. ‘தக்ஷிணம்’ என்றால் தெற்கு திசையைக் குறிக்கும். இந்த தக்ஷிண காளியை வழிபடுவதால், தெற்கு திசையின் அதிபதியான யமதர்மராஜனைப் பற்றிய பயம் நம்மை அணுகாது.


இவள் தக்ஷிணாமூர்த்தி என்று போற்றப்படும் தென்முகக் கடவுளின் அருளை ஒரு தாயின் உருவில், எளிமையானதாக நமக்குப் பெற்றுத் தருகிறாள். அதேநேரத்தில் மிகுந்த ஆற்றல் உடையதாக செய்து கொடுப்பதினாலும், இவளை தக்ஷிண காளி என்று போற்றுகிறோம்.


🌺 வேறு வடிவங்கள்:


ஆதி காளீ, பத்ரகாளீ, ச்மசான காளீ, கால காளீ, குஹ்ய காளீ, காமகலா காளீ, தன காளீ, ஸித்தி காளீ, சண்டி காளீ, டம்பர காளீ, கஹனேச்வரீ காளீ, ஏகதாரா காளீ, சாமுண்டா காளீ, வஜ்ராவதீ காளீ, ரக்ஷா காளீ, இந்தீவரீ காளீ தனதா காளீ, ரமண்யா காளீ, ஈசான காளீ, மந்த்ரமாலா காளீ, ஸ்பர்சமணி காளீ, ஸம்ஹார காளீ, தக்ஷிண காளீ, ஹம்ஸ காளீ, வீர காளீ, காளீ, காத்யாயனி, சாந்தா, சாமுண்டா, முண்டமர்தினி, பத்ரா, த்வரிதா, வைஷ்ணவி என்று காளியை பல வடிவங்களில் வர்ணிக்கின்றன ஞானநூல்கள்.


காளி என்றாலே நாம் பயம் அடையாமல், நம்மை பயத்தில் இருந்து காக்கக்கூடிய சக்தியே அவள் என்பதை உணர்ந்து, கீழ்க்காணும் மந்திரங்களை ஜபித்து வழிபட்டு அருள் பெறுவோம் (தேவியரின் மூல மந்திரத்தை குருமுகமாகப் பெற்று ஜபித்திட வேண்டும்)


🌺 ஸ்ரீகாளி காயத்ரி:


ஓம் காளிகாயை வித்மஹே ச்மசானவாசின்யை தீமஹி

தன்னோ கோரா ப்ரசோதயாத்


🌺 மூல மந்திரம்:  *குரு மூலம் அறியவும்*


ஓம் ஸ்ரீகாளீதேவ்யை நம:


****** சர்வமும் சக்தி மயம் ******

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை