மோட்ச தீபம்

 இறந்தவர்களுக்காக ஆலயங்களில் மோட்சதீபம் ஏற்றப்படுவது ஏன்





மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை மர்மமாக இருப்பதுதான் பல ஆன்மிக நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. பித்ருக்கள் வழிபாடு, அவர்களுக்கான சடங்குகள் எல்லாமே பெரியோர்களால் வகுக்கப்பட்டு காலம்காலமாக நடைபெற்று வருகிறது.


இறந்துபோனவர்களுக்கான ஈமச் சடங்குகள் ஒவ்வொன்றும் அவசியமானவை என்று நினைத்து சிரத்தையுடன் செய்து வருவது மரபு. இந்தச் சடங்குகளைப் பற்றி பல ஆன்மிக நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறிப்பாகக் கருடபுராணத்தில் மிக விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


அதன்படி 'உடலிலிருந்து பிரிந்த ஆன்மா முதல் மூன்று நாள்கள் நீரிலும், அடுத்த மூன்று நாள்கள் அக்னியிலும், அடுத்த மூன்று நாள்கள் ஆகாயத்திலும், இறுதியில் ஒரு நாள் தனது வீட்டிலும் ஆவியுருவில் வசிக்கும்' என்று கருட புராணம் கூறுகிறது. இந்தப் பத்து நாள்களிலும் ஆன்மாவின் கண்கள் மயங்கிய நிலையில் இருக்கும் என்றும், அதன் காரணமாக வெளிச்சம் தடைபடும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இறந்தவர் வீட்டில் 10 நாள்களும் விளக்கேற்றி வைக்கப்படுவது வழக்கம். விளக்கின் வெளிச்சத்தில், இறந்த ஆன்மா தான் உலவிய வீட்டில் எளிதாகப் புழங்க உதவும் என்பார்கள்.


ஆலயங்களில், இறந்தவரின் ஆன்மா இறைவனின் திருவடிகளை அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மிகப் பழங்காலத்திலிருந்தே இறந்தவர்களுக்காக ஆலயங்களில் மோட்ச தீபம் ஏற்றப்படும் நடைமுறை இருந்து வந்திருக்கிறது.


ஒருவர் மறைந்துவிட்டாலோ அல்லது அகாலமாக இறந்துவிட்டாலோ கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று அகத்தியர் பெருமான் கூறியிருக்கிறார். இதிலிருந்தே மோட்ச தீபத்தின் தொன்மையை நாம் அறிந்துகொள்ளலாம். 


போரில் வீர மரணமடைந்த மன்னர்களுக்கு மோட்சதீபம் ஏற்றுவது மரபு... மலை மீதும், கோபுரங்களின்மீதும், சில நேரங்களில் கோயில் கருவறையிலும்கூட மோட்ச தீபம் ஏற்றப்படும். இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளை உறவினர்கள் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், இந்த மோட்ச தீபம் ஏற்றும் சடங்கை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.


மோட்ச தீபம் ஏற்றும் முறை:


மோட்ச தீபம் ஏற்றும் முறைகள் பற்றி நம்முடைய பழைமையான நூல்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் ஏற்றப்பட வேண்டும். அதாவது, மாலை 6 மணிக்கு முன்பு. இருள் சூழும் முன்னரே மோட்ச ஒளி தெரிய வேண்டும். விளக்குகள் (மண் அல்லது உலோகம்), தூய பருத்தித் துணி, வாழை இலை, பச்சைக் கற்பூரம், சீரகம், பருத்திக்கொட்டை, கல் உப்பு, மிளகு, நவ தானியங்கள், கோதுமை, நெல் (அவிக்காதது), முழு துவரை, முழு பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, முழு வெள்ளை மொச்சை, கருப்பு எள், முழு கொள்ளு, முழு கறுப்பு உளுந்து ஆகிய பொருள்களைக் கொண்டு மோட்ச தீபம் ஏற்றப்பட வேண்டும். பருத்தித் துணியில் மேற்கண்ட பொருள்களை மூட்டையாகக் கட்டி, அதன் முடிச்சை ஒரு திரிபோல் செய்து, விளக்கிலுள்ள எண்ணெயில் போட வேண்டும். பிறகு ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். வாழை இலை விரித்து அதன்மீது நவதானியங்கள் பரப்பி அதன்மீதே மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதிகம்.  


ஏற்றப்படும் மோட்ச தீபம், மேல்நோக்கி எரிய வேண்டும். அதற்குத்தான் திரி மூட்டையாகக் கட்டப்பட்டு விளக்கின் நடுவில் வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. இந்தத் தீபத் தோற்றம் சிவலிங்கம்போல இருக்கும். விளக்கு ஏற்றியவுடன் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். ஒருவேளை, பெருமாள் ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம் சொல்லலாம். அப்போது இறந்துபோன ஜீவனுக்காக, அதன் மோட்சத்துக்காக வேண்டிக்கொள்ளலாம். இரவு முழுவதும் நின்று எரியும் மோட்ச தீபத்தைக் காலையில் குளிர வைத்துவிட வேண்டும். பின்னர், இந்தத் தீபப் பொருள்களை ஏதேனும் நீர்நிலையில் சேர்த்துவிட வேண்டும்.


மோட்ச தீபம் மற்றவருக்கு மட்டுமல்ல நாம் வாழும் நாள்களில் நமக்காகக்கூட ஏற்றிக்கொள்ளலாம் என்று ஞானநூல்கள் தெரிவிக்கின்றன. இருக்கும்போது நல்லது செய்வது மட்டுமில்லை, இறந்த பிறகும் நம்முடைய நலன் காக்க உதவிய பெரியவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு சடங்குதான் இந்த மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம்.

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை