தச மஹா வித்யா தேவியர் - பகுதி 5
ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 5
தச மஹாவித்யா தேவியரில் ஐந்தாவதாக தரிசிக்க இருப்பது அச்சம் அகற்றும் ஸ்ரீ திரிபுர பைரவி.
"இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே"
ஆதி சக்தியான காளியே ஸம்ஹார காலத்தில் பைரவி உருவை எடுத்து அருள்கிறாள். சிவப்பரம்பொருள் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர்.
அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர்.
அந்தகனாக உள்ள அசுரனை சிவபெருமான் ஆட்கொண்ட பிறகு, மலைகளில் உறைந்து பக்தர்களை காத்து அருள் புரிந்து, வேண்டிய வரம் அருளி, சிவார்ச்சனை விதிகளையும், தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும் படி பைரவர்களைப் பணித்தார் சிவபெருமான்.
பைரவர்கள் வேண்டிய சக்தியைப் பெற்றிட, எல்லாம் வல்ல பராசக்தியை தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார் சிவபெருமான்.
அதன்படி அனைத்து பைரவர்களும் பராசக்தி ஆராதனை செய்து அன்னை அருளால் சக்திகள் பெற்றனர். பைரவர் சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள்.
மும்மூர்த்திகளை சிருஷ்டி செய்வதாலும், முன்னரே இருப்பதாலும், மூன்று வேதங்களின் ஸ்வரூபமாக விளங்குவதாலும், உலகம் அழிந்த பின்னும் முன்போலவே உலகை பூர்த்தி செய்வதாலும், சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குவதாலும், ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை த்ரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர்.
🌺 பைரவி சக்தியின் பேதங்கள் சாக்த தந்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன அவை:
ஸம்பத்ப்ரதா பைரவி, சைதன்ய பைரவி, காமேச்வர பைரவி, அகோர பைரவி, மஹா பைரவி, லலிதா பைரவி, காமேச்வரீ பைரவி, ரக்தநேத்ர பைரவி, ஷட்கூடா பைரவி, நித்யா பைரவி, ம்ருதஸஞ்ஜீவினி பைரவி, ம்ருத்யுஞ்ஜயா பைரவி, வஜ்ரப்ரஸ்தாரிணீ பைரவி, புவனேச்வரீ பைரவி, கமலேச்வரீ பைரவி, சித்த கௌலேச பைரவி, டாமர பைரவி, காமினீ பைரவி.
இவ்வாறு திகழும் மாதா ஸ்ரீபைரவி தேவியின் புண்ணிய உருவங்களை நினைத்து தினமும் வழிபடுபவர்களுக்கு எந்த நேரத்திலும், எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் பயம் ஏற்படாது என்பது நிச்சயம்.
கூப்பிட்டவுடன் வந்து நம்மை காப்பவளே பைரவி. அவள் முக்கியமான செயல் உலகில் ஏற்படும் கோர சம்பவங்களை நொடிப்பொழுதில் போக்கி அமைதி நிலை நிறுத்தக்கூடியவள் பைரவி.
🌺 ஸ்ரீபைரவி காயத்ரீ:
ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவ்யை ச தீமஹி
தன்னோ தேவி பிரசோதயாத்
🌺 மூல மந்திரம்:. *குரு மூலம் அறியவும்*
ஓம் பைரவ்யை நம
****** சர்வமும் சக்தி மயம் ******
Comments
Post a Comment