தச மஹா வித்யா தேவியர் - பகுதி 10
ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 10
தச மஹாவித்யா தேவியரில் பத்தாவதாக தரிசிக்க இருப்பது வறுமைப் பிணியகற்றும் ஸ்ரீ கமலாத்மிகா தசமஹா தேவியரில் கடைசி தேவி அதே நேரம், அனைத்து சக்திகளின் ஆற்றலும் உடையவள். சாட்சாத் ஸ்ரீ மஹாலட்சுமி அம்சம் சொரூபம் சக்தி உடையவள்.
🌺 தோற்றம் மற்றும் வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்:
இவள் பரப்ரஹ்ம ஸ்வரூபிணி. இந்த சக்தி சுவர்ண நிறத்தினள். தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் பதித்த ஆபரணங்கள் அணிந்தவள். சந்திரனைப் போன்று மக்களை மகிழ்விப்பவள். இந்த சக்தியின் சாந்நித்தியமானது எங்கு நிறைந்துள்ளதோ, அங்கே பொன், பசுக்கள், குதிரைகள், நண்பர்கள், குழந்தைச் செல்வம் ஆகியன நிறைந்திருக்கும்.
ராஜ சம்பத்தை அள்ளி அருள்பவள். இவள் முறுவல் பூத்த முகத்தினள். ஆபரணங்களாலும் உயர்ந்த குணங்களாலும் ஜொலிப்பவள். இந்த தேவி நறுமணம் உடைய இடத்தில் வசிப்பவள்.தான் திருப்தியாய் இருந்து, அனைவருக்கும் திருப்தியை அளிப்பவள். சூரியன் போன்று பிரகாசிப்பவள். உள்ளும் புறமுமாயுள்ள துன்பம் வறுமை ஆகியவற்றை போக்குபவள்.
இந்த தேவியை வழிபடும் அடியவர்களை குபேரசம்பத்து வந்தடையும். பசி, தாகம், பாப ரூபமாக விளங்கும் அனைத்தும் இந்த தேவியை துதித்தால் விலகும். வீட்டில் உள்ள வறுமை நீங்கும். மனதில் தோன்றிய ஆசைகள் நிறைவேறும் என்று விளக்குகின்றன சாஸ்திரங்கள்.
முக்குணங்களும் கொண்டவள். இவள் கண்ணுக்குப் புலப்படக் கூடியதும், கண்ணுக்குப் புலப்படாததுமான ரூபம் உடையவளாக இருந்துக்கொண்டு, இந்த அகில உலகங்களையும் வியாபித்து அருளுகிறாள்.
இந்த சக்தியே ஸமஸ்த வித்யா பேதங்களாகவும் திகழ்கிறாள். சௌந்தர்யம், சீலம், நன்னடத்தை, சௌபாக்கியம் எல்லாம் இவளேயாம்.
🌺 இந்த தேவியை கீழ்கண்ட நாமாக்களால் துதித்து வழிபட்டு, இகபர சுகம் பெறுவார்.
லக்ஷ்மீ, ஸ்ரீ, கமலா, வித்யா, மாதா, விஷ்ணு ப்ரியா, ஸதீ, பத்மாலயா, பத்மஹஸ்தா, பத்மாக்ஷி, லோகசுந்தரீ, பூதானாம் ஈச்வரீ, நித்யா, ஸத்யா, ஸர்வகதா, சுபா, விஷ்ணு பத்னீ, மஹா தேவி, க்ஷீரோததனயா, ரமா, அனந்தா, லோகமாதா, பூ, நீலா, ஸர்வ சுகப்ரதா, ருக்மிணீ, சீதா, ஸர்வா, வேதவதீ, ஸரஸ்வதீ, கௌரீ, சாந்தி, ஸ்வாஹா, ஸ்வதா, நாராயணீ
🌺 ஸ்ரீ கமலாத்மிகா காயத்ரி:
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்
🌺 மூல மந்திரம்:. *குரு மூலம் அறியவும்*
ஓம் கமலாத்மிகாயை நம:
****** சர்வமும் சக்தி மயம் ******
Comments
Post a Comment