மந்திரங்கள் பற்றிய விளக்கம்

மந்திரங்கள் பற்றிய விளக்கம் வகைகள், மற்றும் மந்திரங்களை தந்திரத்தால் பெருக்கும் வழிமுறைகள்
🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉



மந்திரத்தையும் யந்திரத்தையும் செயல்படுத்தும் திறனே தந்திரம். அலை பாயும் மனதில் எழும் எண்ணங்களை நிறுத்தவில்லை என்றால் அது புலன் வழியாகச் செயல் வடிவம் பெறும். எனவே அதைச் சரி செய்ய வேண்டும். மனம் ஆகிய எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தும் திறன் மந்திரங்களுக்கு உண்டு.

மனம் ஒரு நிலைப்பட்டால் அது தவமாகிய செயலாகிவிடும். ஆக மனமாகிய எண்ணம், மந்திரமாகிய சொல், தவமாகிய செயல் மூன்றும் நேர் கோட்டில் வரும் போது யோகம் ஜொலிக்கும்.

இதை வேறு விதமாகவும் சிந்திக்கலாம். அதாவது மந்திரங்கள் மூன்று வகைப்படும்.

1.அட்சராந்தக மந்திரங்கள்,
2.அட்சராப்ய மந்திரங்கள்,
3.பீஜ மந்திரங்கள்

1.அட்சராந்தக மந்திரங்கள்:
சப்தத்தில் இருந்து மொழி வந்தது, மொழியிலிருந்து மந்திரம் வந்தது. மனதுக்கு திறம் தருவது மந்திரம். அட்சராந்தகம் என்பது எழுத்து இல்லாமல் காலகாலமாக காது விட்டு காது வழி வழியாக வந்து கொண்டிருப்பது.

2.அட்சராப்ய மந்திரங்கள்:
அட்சராப்யம் என்பது எழுத்தில் உள்ளது(சுப்ரபாதம், காயத்ரி போன்றவை). நம் சித்தர்கள் மந்திரம், தந்திரம், யந்திரம், ஔசதம் போன்ற பல வழி முறைகளைச் சாதனையில் வெற்றி பெற கடைபிடித்தார்கள். அஷ்டமகா சித்தி பெற்றார்கள். அவர்கள் நம் ஆதாரச்சக்கரங்களின் மையத்தில் உள்ள பீஜ மந்திரங்கள், அவற்றின் இதழ்களில் ஒலிக்கும் அக்ஷரங்கள் எல்லாவற்றையும் ஞானத்தால் அறிந்து மந்திரங்களை உருவாக்கினார்கள்.

3.பீஜ மந்திரங்கள் :
பீஜம் என்பது நம் உடலோடு அதாவது சக்கரங்களின் மத்தியில் ஓலிக்கும் ஒலியின் சப்தமாகிய மந்திரங்கள். இவை பெரும்பாலும் யந்திரங்கள், சக்கரங்களில் எழுதப்பட்டிருக்கும். யந்திரங்கள் என்கிற போது மண்டலம், யந்திரம் என்று இரண்டு பிரிவு உண்டு. ஆனால் நாம் அந்த இரண்டையுமே யந்திரங்கள் என்று சொல்கிறோம். மண்டலங்கள் என்பது ஆன்ம வரைபடம், அல்லது பேரண்ட வரைபடமாகும். யந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட தேவதைக்காக, சக்திக்காக, நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது. திருமந்திரம் மண்டலங்களைச் சக்கரங்கள் என்று சொல்கிறது. பீஜ மந்திரங்கள் பெரும்பாலும் செப்பு, தங்கம், வெள்ளி போன்ற தகடுகளில் யந்திரங்களாக எழுதி வைக்கப் பட்டிருக்கும். அதிகமாக செப்புதான் பயன்படுத்தப்படும்.
ஏனென்றால் அது ஒரு மின் கடத்தி. மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே செப்புவின் இந்த ஆற்றலை நம் சித்தர்கள் கண்டு கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அது கடத்துவதோடு தன்னோடு தக்க வைத்துக் கொள்ளவும் வல்லது. பீஜாட்சரம் எழுதிய செப்புத் தகடின் மேல் விளக்கொளி படும் போது, அது மெல்லிய சக்திக்கு ஆட்படுகின்றது. மேலும் இடையறாத மந்திர சப்த அலைகள் அதன் மேல் படும் போது அவைகளை அப்படியே தன் மேல் பதிய வைத்துக் கொள்கிறது. இதைத்தான் உருவேற்றுவது என்பார்கள். முறைப்படி உருவேற்றப்பட்ட செப்புத் தகடானது தன்மேல் பதிந்துள்ள ஒலி மற்றும் ஓளி அலைகளை மின் காந்த அலைகளாக கசிய விட்டுக் கொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலம் வரை அந்த சக்தி அதில் நிலைத் திருக்கும். நம் பார்வைக்கோ, செவிப் புலன்களுக்கோ அது புலப்படாது. அந்த நுண்ணிய ஒலி மற்றும் ஒளி அலைகளின் மின்காந்த சக்தியானது அந்தத் தகடு இருக்கும் இடத்தில் உள்ளவர்கள் உடம்பில், மனதில் செயல் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்படி மறைவான இயக்க சக்தியாக இருப்பதால் அதை யந்திரங்கள் என்கிறோம். இதைப் புரிந்து கொள்ளாத வரை அது வெறும் தகடு, கோணல் மாணலாகக் கோடு, எல்லாம் பித்தலாட்டம் என்று சொல்வார்கள். இந்த யந்திரங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் பூராவுமே உள்ளன. மொத்தத்தில் மந்திரம் பதிவாகி செயல்படும் இடம் யந்திரம். இந்த இரண்டையும் பயன்படுத்தும் திறனே தந்திரம்.

மந்திரத்தை தந்திரமாக உபயோகிக்கும் முறையை சித்தர்கள் கண்டுபிடித்த விதம்:

சிலருக்கு இந்த மந்திரங்களை எத்தனை முறை உச்சரிக்க வேண்டும் என்கிற சந்தேகம் வந்து விடுகின்றது. 27 நட்சத்திரங்களுக்கும் தலா 4 பாதங்கள் வீதம் 108 பாதங்களில் இருந்து வரும் சக்திகளை கிரகித்து உடலில் உள்ள ஆறு ஆதாரங்களை நன்றாக இயங்கும் வகையில் தூண்டச் செய்ய 108 முறை உச்சரிக்க வேண்டும்.

சகஸ்ராரத்தில் உள்ள 1008 இதழ்களில் உள்ள அக்ஷரங்களை தூண்டிவிட்டு எல்லா நாடி, நரம்புகளுக்கும் சக்தி கிடைத்திட 1008 முறை உச்சரிக்க வேண்டும்.

வாயினால் சொல்வதைவிட மனதுக்குள் பலமாக உச்சரிப்பதே அதிக பலன் தரும். அதுவும் மூச்சை கும்பகம் செய்து சொன்னால் முழு பலனும் கிடைக்கும்.

ஒரு மந்திரத்தை 5,00,000 முறை உச்சரிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. அதற்கும் சித்தர்கள் ஒரு உபாயத்தை கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது அமாவாசை அன்று ஒரு மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் 50,000 முறை உச்சரிப்பதற்குச் சமம்.

அதுவும் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் 60,000 முறை உச்சரிப்பதற்குச் சமம்,

சூரிய கிரகணத்தன்று ஒரு மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் 2,00,000 முறை உச்சரித்ததற்குச் சமம். அதுவே அன்று ஞாயிற்றுக் கிழமையும், பூச நட்சத்திரமும் கூடி இருந்தால் 2,50,000 லட்சம் முறை உச்சரிப்பதற்குச் சமம்.

அன்று ஜெபிப்பவர் ஜென்ம நட்சத்திரமாக இருந்தால் 2,60,000 முறை உச்சரிப்பதற்குச் சமம். அதுவே சூரிய கிரகணம் நடை பெறும் போது உத்ராயணமாக இருந்து, ஞாயிற்றுக் கிழமையாகவும் இருந்து, ஜெபிப்பவரின் ஜன்ம நட்சத்திரமாகவும் இருந்தால் 108 முறை உச்சரித்தாலே 5,00,000 முறை உச்சரித்தற்குச் சமம்.

எவ்வளவு சூட்சுமம் பாருங்கள். இதையெல்லாம் ஞானத்தால் கண்டு பிறர்க்குப் பயன்படும் விதமாக தந்தருளியவர்கள் சித்தர்கள்.
  🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼🕉🙏🏼

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை