ஜென்ம நட்சத்திரக் குறியீடுகள்

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்


ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.

அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர்.

வெற்றிக்கு தனி வழி

வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.

உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். சற்றே புதியதாகவும், நூதன விஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

நட்சத்திர குறியீடுகள்:

1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.

2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்

3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை

4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்

5. மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்

6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி

7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு

8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி

9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.

10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்

11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை

12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை

13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை

14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.

15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்

16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்

17. அனுஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு

18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி

19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை

20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்

21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்

22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு

23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை

24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்

25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்

26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்

27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

சின்னங்களின் பயன்:

ஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்னங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள், ‘லெட்டர் பேடு’ போன்றவற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங்களை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு களும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.

அதற்காக, புராண கால உதாரணங்களை இங்கே காணலாம். கீதையின் நாயகன் கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோகிணி என்பது அனைவரும் அறிந்த விஷயம். ரோகிணி நட்சத்திர குறியீடாக ‘தேர்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தேரின் சாரதியாக கிருஷ்ணன் இருந்து நடத்திய ‘பாரதப்போர் நாடகம்’ அனைவரும் அறிந்ததுதான்.

இன்னொரு உதாரணமாக ராமபிரானை இங்கே குறிப்பிடலாம். அதாவது, ராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். அந்த நட்சத்திரத்தின் குறியீடாக வில் சொல்லப்பட்டுள்ளது. ராம பாணத்தை செலுத்த உதவும் வில்லை தனது ஆயுதமாக பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பெற்ற வெற்றிகள் இதிகாசமாக மலர்ந்ததை உலகமே அறியும்.

இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் மூன்றடி உருவம் கொண்ட வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த நட்சத்திரத்தின் குறியீடாக மூன்று பாதச்சுவடுகள் குறிப்பிடப்படுகிறது. ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து முடித்த பின்னர், மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பிய புராணத்தை அனைவரும் அறிவார்கள்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை என்று ஒரு தகவல் இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் குறியீடாக சிங்கத்தின் வால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள ‘கதையின்’ வடிவம் கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும் அனைவரும் நன்றாக அறிவோமல்லவா..?

ருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு சொல்லப்பட்டுள்ளது. ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந் திருப்பதோடு, கபால ஓட்டை கையில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

திருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின் மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நட்சத்திரங்களுக்கான குறியீடுகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதாகும். அதன் மூலம் ஒருவரது ஜனன கால கிரக நிலைகளுக்கு தக்கவாறு சாதகமான சூழல்கள் அமைகின்றன என்று கருதலாம். அந்த குறியீடுகளை அல்லது சின்னங்களை நமது வெற்றிக்கான ‘பார்முலாவாக’ பயன்படுத்தி, வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பு களையும் பெறலாம்.

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை