திருவாதிரை களி

திருவாதிரை களி பிறந்த கதை



தில்லை ஸ்ரீ நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது ஏன்? இதற்குப் புராணம் சொல்லும் தகவல்.. தில்லையில் சேந்தனார் என்னும் சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டி, விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்யத் தவற மாட்டார். அத்துடன் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார். சிவனடியார்களை உபசரித்த பின்தான் அவர் உண்பது வழக்கம். சேந்தனாரின் பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தில்லை வாசன், திருவுள்ளம் கொண்டார். திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாகத் தொடர் மழை பெய்து கொண்டிருந்தது, தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் தவித்தார் சேந்தனார். காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால் தான் அன்றைய பொழுது ஓடும். வீட்டில் சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை.

இந்த இக்கட்டான நிலையில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? அவர்களை எப்படி உபசரிப்பது? என்று அவர் மனைவியும் சேந்தனாரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன், திருச்சிற்றம்பலம்... சம்போ மகா தேவா... என்ற குரல் கேட்டு வெளியே வந்தவர்கள் மழைத் தூறலில் சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து பணிவிடை செய்தார்கள். சிவனடியாரின் பசியைப் போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு அரிசிமாவில் வெல்லப் பாகு தயாரித்துக் கலந்து களி கிளறினாள். சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடை பெற்றுச் சென்றார்.

மறுநாள் காலை சேந்தனாரும், அவர் மனைவியும் ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோயிலைத் திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள். சேந்தனாரும் அவர் மனைவியும் இறைவன் முன் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும், அவருக்குக் களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜப் பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றி மகிழ்ந்தார்கள். அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது என்று புராணம் கூறுகிறது. மார்கழி மாதத் திருவாதிரை அன்று விரதம் மேற்கொண்டு திருவாதிரைக் களியை உண்பவர் நரகம் செல்ல மாட்டார்கள் என்பது நம்பிக்கை


களி செய்முறை:
***நெய் - கால் கப்
***பச்சரிசிமாவு – (2 கப் பச்சஅரிசியை களைந்து உலர்த்தி அரிசிபொரி போல 10 நிமிடம் வறுத்து மிக்க்ச்யில் பொடிக்கவும்)
***கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 400 கிராம் வெல்லத்தை கரைந்து
ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும்.
பச்சரிசிமாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும்.
***நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, அரை கப் தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
***ஏலப்பொடியை சேர்க்கவும்

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை