போகி பண்டிகை

போகி பண்டிகை
கொண்டாடப்படுவதன் ஆன்மிக தத்துவம் என்ன தெரியுமா ?


                                                                       ......
நீண்ட நெடிய கலாசாரப் பெருமையைக்கொண்ட நம் நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் மனிதனின் வாழ்வை மேம்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் உருவாக்கப்பட்டதே. அந்த வகையில் மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் திருவிழாவின் முதல் நாள் விழாவாக மார்கழி மாதத்தின் கடைசி நாளில் வரும் போகிப் பண்டிகை அமைந்திருக்கிறது. பண்டைய தமிழர்களின் வழக்கப்படி ஆண்டின் கடைசி நாளான இந்த நாளில், அந்த ஆண்டு முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் நல்லவற்றைத் தொடர்ந்து செய்யவும் உறுதி ஏற்பார்கள். இதுவே ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற கருத்துருவமாகத் தோன்றியது. ‘போக்கி’ எனும் இந்தப் பண்டிகையே குப்பை கூளங்களை நீக்கி வாழ்விடங்களைச் சுத்தமாக்கும் நாளாக மலர்ந்தது. நாளடைவில் ‘போக்கி’ என்பது மருவி “போகி” என்றானது. -  - ‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும்விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய காலத்தில் மழையை வரவழைக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த விழா இந்திரா விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது. போகி என்றால் ‘மகிழ்ச்சியானவன்’, ‘போகங்களை அனுபவிப்பவன்’ என்று பொருள். நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் வேளாண்மை மக்கள் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவே ‘போகிப் பண்டிகை’ எனப்படுகிறது. போகிக்கு முந்தைய நாளில் வீடு வெள்ளையடிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். போகிப் பண்டிகை அன்று அதிகாலையில் நிலைப்பொங்கல் வைக்கும் வழக்கம் இன்றும் நமது தென்மாவட்டப் பகுதிகளில் இருக்கிறது. அதாவது வீட்டுத் தெய்வங்களை எண்ணி பொங்கலிட்டு, மறைந்துபோன சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களுக்குச் சேலைவைத்து வணங்கும் வழக்கம் இது. பொங்கலிடுவதற்கு முன்னர் வீட்டின் கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, கருந்துளசி, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. முந்தையக் காலங்களில் எல்லாவிதக் குறிப்புகளும் பனையோலை ஏட்டில்தான் எழுதப்படும். இலக்கியங்களும், புராணங்களும்கூட பனையோலையில்தான் இருந்துவந்தன. படித்தவர்களின் வீட்டில் பரணெங்கும் கிடந்த இந்தப் பனையோலைகள் யாவும் இந்த போகி நாளில் எடுக்கப்பட்டு, சிதைந்துபோன ஏடுகள் நீக்கப்பட்டு, மீதமிருந்த ஓலைகள் புதிதாகக் கட்டப்படும். சிதைந்து போன ஓலைகளில் இருந்த விஷயங்கள் புதிதாக எழுதப்படும். சிதைந்த ஓலைகள் தீயிலிட்டுக் கொளுத்தப்படும். இதுவே போகியன்று தீ மூட்டும் வழக்கமாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைய நாளில் போகிப் பண்டிகையின் தாத்பர்யம் தெரியாமல் மனதில் உள்ள மடமைகளை அழித்து எரிக்காமல், தெருவில் உள்ள டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும் எரித்து சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துகிறார்கள். இறைவனால் படைக்கப்பட்ட இந்த அழகிய புவிப்பந்தை மாசுபடுத்தும் செயலை இறைவன் மன்னிக்கவே மாட்டார்.                                         

போகிப் பண்டிகையான இன்று கூற வேண்டிய          மந்திரம் !
 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯                                                                                             மாசு நிரம்பிய காற்று மனிதர்களையும், மற்ற ஜீவராசிகளையும் பெரிதும் பாதித்து, நோய்களை உருவாக்குகிறது. இதுவும் கடவுளால் மன்னிக்க முடியாத செயல்தான். எனவே போகிப்பண்டிகை தினத்தில் பிற்போக்குத்தனமான, மற்றவர்களை வதைக்கும் மடமைகளை அகற்றுவோம். நம்முடன் மற்றவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தும் பொருள்களைக் கொளுத்தினால், நாம் இன்னும் நம் கடவுளைப் பற்றியும், நம்முடைய சடங்குகள் பற்றியும் அறிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். பொங்கலை இனிதே வரவேற்போம். பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட வாழ்த்துவோம்!
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை