புத்தரின் போதனைகள்

சஞ்சலமற்ற வாழ்வுக்கு
புத்தர் தரும் போதனைகள்
_________________________

மனிதன் மனிதனாக வாழ உதவுவதும் மனித நிலையிலிருந்து மேம்படுவதற்கான உரிய வழிவகைகளை வகுத்துரைப்பதும் சமயத்தின் குறிக்கோள் எனலாம்.

சமயங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்பச் சில மாற்றங்களைப் பெற்று, தம்மைப் புதுப்பித்துக் கொள்வது என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மையாகும்.

பழைய கொள்கைகளையும் பழக்க வழக்கங்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் சமூகத்தில் புரட்சியும் மறுமலர்ச்சியும் தோன்றுவது தவிர்க்க முடியாத நிகழ்ச்சிதான்.

சடங்குகளும் சம்பிரதாயங்களும் வேள்விகளும் வேதங்களுமே மனிதனை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை மிகுந்திருந்த காலத்தில் புத்தர்பிரான் புதியதோர் ஒளிக்கதிராய்த் தோன்றினார்.

மனிதரை வெளியே உள்ள யாருமே முன்னேற்ற முடியாது.  மனிதன் தன்னாலேதான் உயரவேண்டும். தன் முயற்சியும் தன் ஒழுக்கமும்தான் மனித உயர்விற்கு அடிப்படையாகும் என்றும், மனப்பண்பாடுதான் வாழ்க்கையின் லட்சியம்  என்றும் வழிகாட்டியவர்  புத்தர்.

புத்தர்பிரானின் தோற்றம்

புத்தர்பிரானின் தோற்றம் குறித்து அறவண அடிகள் அறவணர்த் தொழுத காதையில் கீழ்வருமாறு விளக்குகிறார்: ‘புத்தர்பிரான் கூறிச் சென்ற நல்லறம் தளர்ந்தது. என்றும் அழியாத வீட்டு நெறி தடைபட்டது.

வெயிலை உணர முடியுமே தவிர, காண இயலாது. அதுபோலவே, ஆன்றோர் உணர்ந்தவாறே வீட்டு நெறியை நாம் உணர இயலாது. ஊசியால் துளைக்கப்பட்ட மணியின் மெல்லிய துளைவழியே கடல்நீர் புக இயலாது; என்றாலும் அத்துளை வழியே மிகக் குறைந்த அளவு நீர் நுழைய முடியும்.

அதுபோல நல்லறங்களைச் சிறிது சிறிதாக அடைய முடியும் என்று நினைத்து நான் அறக்கருத்துகளைக் கூறுவது உண்டு; ஆயினும் உலக மக்கள் கேட்டுத் தெளிவு பெறவில்லை.

 இதைப்போன்றதொரு காலகட்டம் முன்பு இருந்தது. அந்த நிலையில்தான் புத்தபிரான் தோன்றினார்.’

இவ்வாறு அறவண அடிகள் கூறிச் செல்கிறார். உலகமக்களின் துயரம் நீங்க, தேவர்கள் வேண்டியதாகவும் அவர்களின் வேண்டுகோளைக் கேட்ட பிரபாபாலன் என்ற தேவன் புத்தரின் தோற்றம் பற்றிக் கூறிய கருத்தும் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது

புத்தரின் பெருமை

புத்தரின் பெருமையை, சங்கதருமன்,  மணிமேகலா தெய்வம், மணிமேகலை ஆகிய பாத்திரங்கள் மூலம் சாத்தனார் விரிவாகப் பேசுகிறார். முதலில் புத்தரின் தோற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் பார்க்கலாம்.

புத்த ஞாயிறு தோன்றும்பொழுது மதியும் ஞாயிறும் தீமையுறாமல் விளங்கும்.
ஓரிடத்தில் நிலைக்காது சுழன்று கொண்டேயிருக்கும் கோள்களால் கேடு விளையாது.
வானம் பொய்க்காது மழைபெய்யும்.
உலகில் வளம் பல பெருகும்.
உயிர்கள் யாவும் துன்பம் அடையா.
காற்று வலமாக எழுந்து சுழலும்.
திசைகள் எல்லாம் செழுமையுறும்.
முத்து, பவளம் முதலிய பல வளங்களைக் கடல் நல்கும்.
பசுக்கள் கன்றுகளுக்கு ஊட்டிக் கலம் நிறையப் பாலைத் தரும்.
பறவைகள் பயனை நுகர்ந்து தாம் தங்கும் இடங்களிலிருந்து நீங்கா.
விலங்கினமும் மக்களினமும் குறையுடைய பிறவிகளைப் பெற மாட்டா. அக்காலத்தில் பிறந்து அப்பெருமானின் அருளறத்தைக் கேட்டவர்கள் பிறவித்துன்பத்தைக் கடந்தவராவர்.🙏


You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை