ஸ்ரீ காளஹஸ்தி

ஸ்ரீ காளஹஸ்தி யின்
சிறப்புகள்
_________________________

காளஹஸ்தி சிவனுக்கு, தென் கயிலாய நாதர், ஆராவமுது, திருக்காளத்தி நாதர், கணநாதர், ஐங்குடுமித் தேவர், கல்லாலடியார், ஐந்து கொழுந்து, கல்லாடியில் கரும்பு, குடுமித்தேவர், மருந்து, மலை மேல் மருந்து, கபாலி, காளத்தி, காளத்திக் கற்பகம், ஜோதிவிடங்கர், பொன்முகரித் துறைவர் என 16 வகை பெயர்கள் உள்ளது

அம்பிகைக்கு ஞானப்பிரசனாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, சிற்புட்கேசி, வண்டார்குழலி ஆகிய 7 பெயர்கள் உள்ளன.

காளஹஸ்தி கோவிலின் தல விருட்சமாக அகண்ட வில்வம், கல்லால மரம் ஆகியவை உள்ளன.இத்தல தீர்த்தமாக பொன் முகரி, பிரம்ம தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம் உள்பட மொத்தம் 14 தீர்த்தங்கள் இருக்கின்றன.

இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம் ' என்றழைக்கப்படுகிறது.

காளத்தி நாதர் இரு கண்களும் இழந்தவராக உள்ளார். அவருக்கு இடது கண்ணாக அம்பாளும், வலது கண்ணாக கண்ணப்பனும் திகழ்வதாக கருதப்படுகிறது.

காளத்த நாதர் வீற்றிருக்கும் மலைப்பகுதிக்கு ஆனந்த நிலையம் என்றொரு பெயரும் உண்டு. காளத்திநாதர் கோவில் கட்டப்பட்டு சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.

மூலவருக்கு கங்கைநீரை தவிர (சுவாமிக்கு மேலே தாராபாத்திரமுள்ளது) வேறெதுவும் மேனியில் படக்கூடாது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே.

தென்கயிலாயம் என்று புகழப்படும் ஆலயங்களில் காளஹஸ்தி ஆலயமும் ஒன்றாகும்.

காளத்திநாதர் கோவிலில் சோழ மன்னன் வீரராஜேந்திர சோழன் மற்றும் விஜயநகர மன்னர்கள் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர்.

காளஹஸ்தியில் வழிபாடு செய்தால் கயிலையில் வழிபாடு செய்த பெரும் பேறு கிடைக்கும். எனவேதான் காளத்திபாதி, கயிலை பாதி என்று நக்கீரர் பாடியுள்ளார்.

ஸ்ரீ - காளம் - அத்தி -சிலந்தி - பாம்பு - யானை - ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம். மலையடிவாரத்தில் உள்ள அருமையான திருக்கோயில். மலை, கைலாசகிரி என்று வழங்கப்படுகிறது.

காளஹஸ்தியில் கண்ணப்ப நாயனாரும், சிவகோசரியாரும் முக்தி அடைந்துள்ளனர்.

"அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி" எனச் சிறப்பிக்கப்படும் தலம்.

இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது.

நக்கீரர் தென்திசை நோக்கி வந்த போது இத்தலத்தில் பல்லாண்டுகள் தங்கி ஈசனை வழிபட்டார்.

சிவபெருமான், இத்தலத்தின் வட கிழக்கில் பர்வத ரூபத்தை ஏற்படுத்தி அங்கு முருகனை தங்க வைத்து, அவனது அருட்செல்வர்களுக்கு சகல வித்தைகளையும் கற்றுக் கொடுக்க உத்தரவிட்டார்.

அருச்சுனன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

காளஹஸ்தி கோவிலில் உள்ள சுற்றுச்சுவர்கள், உள்பகுதி விமானங்கள் அனைத்தும் ராமேசுவரம் ராமநாதர் கோவில் அமைப்பை அப்படியே ஒத்துள்ளன.

காளஹஸ்தியில் ஓடும் நதி பொன், வெள்ளி போல் ஒளியினை உமிழ்ந்ததால் அதற்கு சொர்ணமுகி நதி என்ற பெயர் ஏற்பட்டது.

மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு; இஃது வாயுத்தலம் என்பதை நிதர்சனமாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.

சொர்ணமுகி நதியில் திருப்பதி ஏழுமலையானின் திருமஞ்சன நீர் கலந்து மேலும் சிறப்பை ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள்.

நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி ' பாடியுள்ள பெருமை பெற்ற தலம்.

பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது. சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். இங்கு இவ்ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி - இவ்வடிம் மிகச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

காளஹஸ்தியில் உள்ள பாதாள விநாயகரை வழிபட நாம் 35 அடி ஆழத்துக்கு கீழே இறங்க வேண்டும். அதற்காக 20 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி.

இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை; காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.

இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால், இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனிபகவான் மட்டும் உள்ளார்.

2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவுள்ளது; கவனித்தால்தான் தெரியும். பலபேர், 'காளத்தி சென்று வந்தேன்' என்று சொன்னால், 'இரண்டு கால் மண்டபம் ' பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது.

கார்த்திகை தீபம் தினத்தன்று எள்ளை இடித்து பொடியாக்கி அதை தண்ணீர் விட்டு பிசைந்து அகல் விளக்கு போல மாற்றி அதில் எண்ணை ஊற்றி திரி வைத்து, பனை மரத்தின் உச்சியில் வைத்து தீபம் ஏற்றுவார்கள். அதில் பனை மரத்துடன், அகல் விளக்கும் எரிந்து போகும். அதில் உள்ள கரியை எடுத்து வந்துதான் காளத்தீஸ்வரருக்கு பொட்டாக வைப்பார்கள்.

அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அம்பாள் - ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது.

இத்தலத்தில் ஓடும் சொர்ணமுகி நதி தெற்கில் இருந்து வடக்கு திசை நோக்கி செல்வதால், அதை "உத்திரவாகினி'' என்றும் அழைக்கிறார்கள். பொன்முகலி உத்தரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாகும்.

இத்தலத்தில் உள்ள மற்றுமொரு சிறப்பு, இங்கு அர்த்தசாமப் பூஜை கிடையாது. சாயரட்சை பூஜையுடன் முடிவு. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை, பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விடுவார்கள்.

சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

ஓம் நமச்சிவாய 🙏

You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks


Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை