சிவாலய அன்னாபிஷேகம்

சிவாலய அன்னாபிஷேகம்


அன்னம், பரபிரம்மம் என்பர். அதாவது, 'உணவே தெய்வம்' என்பது, இதன் பொருள். இதனால் தான், சமையல் செய்யும் போது, கெட்ட எண்ணங்களை தவிர்த்து, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும் என்று கூறுவர். சமையலின் போது, மனதில் எந்த மாதிரி எண்ணங்கள் ஓடுகிறதோ, அது, சமைக்கும் உணவுக்கு தாவும்; அந்த உணவை சாப்பிடுவோருக்கு அந்த எண்ணங்களின் தாக்கம் பாயும். இதனால் தான், சமையலை, 'தபஸ்' என்றும், சமையல்காரர்களை, தபசுப்பிள்ளை என்பர். 'தபஸ்' என்றால் தவம்.
முனிவர் ஒருவர், இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், மூச்சடக்கி, பேச்சடக்கி, உணவை மறந்து, நெருப்பின் மீது நின்று, இன்னும் எத்தனை வித்தைகள் உண்டோ, அத்தனையையும் செய்து, மனதை ஒருமுகப்படுத்தி, தவம் செய்வார். இதே போல, சமையலின் போதும், கவனம் சிதறாமல், மனம் ஒன்றி செய்தால் தான், அது ருசிக்கும்.
இப்படி நல்ல எண்ணங்களுடன், மந்திரங்கள் சொல்லி சமைக்கப்படும் உணவைத் தான், கோவில்களில் சுவாமிக்கு படைக்கின்றனர். கோவில் மடப்பள்ளியில் சமைப்பவர் மனதில், வக்ர எண்ணம் இருந்தால் அது, கடவுளைக் கோபப்படுத்தி, ஊரையே பாதிக்கும். இதற்காகத்தான், அன்னத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில், சிவாலயங்களில், அன்னாபிஷேகம் எனும் விழாவையே உருவாக்கினர்.

ஒருவன் சாப்பாட்டு ராமனாக இருந்தால், அவனிடம், 'இவனுக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்று, கேலியாகச் சொல்வர். உண்மையில், இது கேலிக்குரிய சொற்றொடர் அல்ல; சிவனுக்கு சோறால் செய்யப்படும் அன்னாபிஷேகத்தை தரிசித்தால், அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதே, உண்மையான அர்த்தம். தேவாரம், திருவாசகம் பாடி, சிவத்தொண்டர்கள் சமைக்கும் உணவு, வாழும் காலத்தில், சொர்க்கம் போல் உடலுக்கு சுகம் தருகிறது. அந்த உணவால், சிவனுக்கு அபிஷேகம் செய்வதை தரிசிக்கும் போது, வாழ்க்கைக்குப் பின், சொர்க்கம் கிடைக்கிறது.

மனிதனுக்கு முதல் எதிரி, பசி என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு குரு, தன் சீடனுக்கு வேதம் கற்றுக் கொடுத்து வந்தார். ஒருமுறை, பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையில் இருந்து, அவனுக்கு சாப்பாட்டைக் குறைத்தபடி வந்தார். ஒரு கட்டத்தில், தண்ணீர் கூட கொடுக்க வில்லை. 15 நாட்கள் கழித்து அமாவாசை அன்று அவனை அழைத்து, 'நேற்று கற்று தந்த வேத பாடத்தைச் சொல்...' என்றார். பசி மயக்கத்தில், அவன் வாயிலிருந்து, ஒரு வார்த்தை கூட வரவில்லை; இத்தனைக்கும் அவன் மிகச்சிறந்த மாணவன்.

அடுத்தநாள் முதல், உணவின் அளவை, சிறிது சிறிதாக உயர்த்திக் கொடுத்தார். பவுர்ணமியன்று, முழு சாப்பாடு கிடைத்தது. இப்போது, சீடன் வேதத்தை அழகாக ஒப்பித்தான். எனவே, இந்த உடல், அன்னத்தினால் தான் இயங்குகிறது என்பதை புரிந்து, அதற்கு தரப்படும் உணவை, நல்ல எண்ணங்களுடன் சமைத்து, சுவாமிக்கு நைவேத்யம் செய்து, பிரசாதமாக சாப்பிட வேண்டும்.
இந்த அன்னாபிஷேகத் திருநாள் முதல், இதை நாம் கடைப்பிடிப்போமே!


You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks


Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை