தமிழ் கடவுள் முருகன்

தமிழ் கடவுள் முருகன்...
➖➖➖➖➖➖➖➖➖➖



சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.

இவருக்கு கணங்களின் அதிபதியான கணபதி அண்ணனாகவும், வைணவக் கடவுளான திருமால் மாமனாகவும் அறியப்படுகிறார்கள். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகள்.

தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.
முருகப்பெருமான் தமிழ்க் கடவுள். 

சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர். முருகன் ஓம் எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான்.
பழமைக்கும் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான். முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம். எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள். முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன். என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.

முருகன் ஓம் எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான். பிரணவம் என்றால், சிறந்த புதிய ஆற்றலைத் தருவது என்று பொருள். முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

தந்தைக்கு ஓம் என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு. ஓம் என்பது அ, உ. ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கை யால் உண்டானது. அ- படைத்தல் உ- காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும். அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்குப் படைத்ததாகவும், அதன் பின் வந்த சமஸ்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.

முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள். 

முருகனுக்குப்படை வீடு ஆறு. அவை_

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், 
பழனி, 
சுவாமிமலை, 
பழமுதிர் சோலை, 
திருத்தணி ஆகும். 

முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.
தெய்வ யானை கிரியா சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் பலவித விரதங்கள் இருந்தாலும், அதில் முதன்மையாக சஷ்டி விரதம் உள்ளது.

திருசெந்தூரில் சூரனுடன் முருகன் 6 நாட்கள் சண்டையிட்டபோது, அவரது அன்பர்கள் விரதம் இருந்த தியானித்தனர். அன்று தொடங்கிய இந்த பாரம்பரிய சக்திமிகு விரதத்தை இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடை பிடிக்கிறார்கள்.

திருச்செந்தூர் கந்த தலத்தில் சஷ்டி விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும். வேலை வணங்குவதே வேலை என்று முருகனுடன் மனம் ஒன்றுபவர்களை முருகன் நிச்சயம் ஆட்கொள்வார்.

முருகன் குறித்த பழமொழிகள்:
:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*
வேலை வணங்குவதே வேலை.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
வேலனுக்கு ஆனை சாட்சி.
வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
கந்தசட்டி கவசம் -விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து..

You can join to my public group to learn more about spiritual information : -

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை