கொலுவின் சிறப்புகள்
கொலுவின் சிறப்புகள்...
➗➗➗➗➗➗➗➗➗➗➗
➗➗➗➗➗➗➗➗➗➗➗
நவராத்திரியின், மிக முக்கியமான அம்சம் கொலு வைப்பதாகும். வீட்டையே மிக அழகாக மாற்றி, அனைவரையும் உற்சாகம் கொள்ள வைப்பது கொலுதான்.
மகிஷாசுரனின் வதத்துக்காக பிரம்மா, சிவன், விஷ்ணு முதலான அனைத்து தேவர்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்து பெரும் ஜோதியாகி அந்த ஒளிவடிவே தேவியாக உருமாறினாள். அப்போது அம்பிகைக்கு மூன்று தெய்வங்கள் உட்பட எல்லோரும் ஆயுதங்கள் தந்து தத்தம் சக்தியிழந்து பொம்மைகளாக நின்றார்களாம். எனவே தான், பொம்மைகளாக நின்ற தெய்வங்களை கொலு வைத்துச் சிறப்பிக்கிறோம்.
புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று கொலு அலங்காரம் தொடங்குகிறது. அப்போது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் கொலுப்படிகள் வைக்கப்பட வேண்டும். படிகளின் மேல் தூய துணி விரிக்கப்பட்டு, அம்பிகையின் கலசமும் விநாயகர் சிலையும் முதலில் வைக்கப்படும்.
பின்னர் மற்ற தெய்வங்களின் பொம்மைகள் அழகாக வரிசையாக வைக்கப்படுகின்றன. பழங்கால பாரம்பரிய பொம்மையாகிய மரப்பாச்சிகளும் இதில் இடம் பெறும்.
முதல் நாள் பூஜிக்கப்பட்ட கலசமும் பொம்மைகளும் படிகளில் வைக்கப்பட்டுவிட்ட பின்னர், எல்லா பொம்மைகளிலும் தேவியின் சக்தி மையம் கொண்டு விடுவதாக ஐதீகம்.
இப்படி அமாவாசையன்றே பொம்மைகளை அலங்கரித்துவிட்டாலும் அடுத்த நாள் தான் பண்டிகை தொடங்க வேண்டும்.
தினமும் காலையில் குளித்து தூய்மையுடன் கொலுவின் முன்னால் சுத்தப்படுத்தி, கோலம் இட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அன்னம், பருப்பு, நெய் இவற்றுடன் ஏதாவது சித்திரான்னம் செய்து, வெற்றிலை, பாக்கு பழத்துடன் நைவேத்தியம் செய்வது விசேஷம்.
இந்த ஒன்பது நாட்களும் மாலைவேளைகளில் விளக்கேற்றி, நவதானியங்களைக் கொண்டு தினமொரு சுண்டல் செய்து, பழம் தேங்காய் இவற்றை நைவேத்யம் செய்து தேவியின் ஸ்லோகங்களை முடிந்தவரை பாராயணம் செய்யலாம். சங்கடங்கள் மறைத்து சவுபாக்கியம் பெருகும்.
கொலு வைக்கும் இல்லத்தரசிகள் தினந்தோறும் இளம் பெண்கள், கன்னிப்பெண்களைப் பூஜைக்கு அழைத்து, அவர்களையும் தேவியாகவே பாவித்து வணங்க வேண்டும். அவர்களை வழியனுப்பும் போது வெற்றிலை பாக்கு, மஞ்சள், ரவிக்கைத்துண்டு ஆகியவற்றைக் கொடுத்தனுப்புவது விசேஷம்.
ஒவ்வொரு நாளும் இரவில் கொலுவுக்கு ஆரத்தி எடுத்து, அன்றைய பண்டிகையை முடிக்க வேண்டும். கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி என்று விசேஷ தினங்களாக கொண்டாடப்படுகின்றன.
விஜயதசமி பண்டிகையின் கடைசி தினமாதலால், அன்று மாலை தெய்வ சக்தியுள்ள பதுமைகளையும் கலசத்தையும் கொலுவினின்றும் அகற்றுவதற்கான விசேஷ பிரார்த்தனை செய்ய வேண்டும். கலசம் வைத்து பூஜை செய்தவர்கள் தேவியை எழச்செய்து, அவளுக்குரிய இடத்துக்கு விடை கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.
அன்றிரவு கொலுவில் வைக்கப்பட்ட ஏதாவது இரு பதுமைகளை, கிழக்கு மேற்காக படுக்கவைத்து, பத்து நாட்கள் தெய்வமாக நின்று அருள் புரிந்த நீங்கள் இனி ஓய்வெடுக்கலாம் எனக்கூறி நவராத்திரி பூஜையை ஆரத்தி எடுத்து முடித்து வைத்து, மறுநாள் பொம்மைகளை அகற்றலாம்.
இதுவே காலம் காலமாக கடைபிடித்து வரும் ஐதீகம் ஆகும்.
You can join to my public group to learn more about spiritual information : -
Comments
Post a Comment